Kazhudhai

கற்பூர வாசனை தெரிந்த கழுதை

Sunday, November 30, 2008

பகடை - பகுதி 1

The First Encounter

"பிரபல தாதா முத்து சுட்டுக் கொலை"  

தினத்தந்தி அக்டோபர் 9, சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி முத்து போலீசாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப் பட்டான். அவனது கூட்டாளிகளான ஷண்முகம், பாபு மற்றும் சப்பை (எ) சேகரும் சுட்டுக் கொல்லப் பட்டனர். மேலும் சிங்கம் (எ௦) சுந்தரம், ஜோசப், மற்றும் அர்ச்சுனன் ஆகியோர் போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தனர். இந்த என்கவுன்ட்டர் பகல் பொழுதில் பொது மக்களின் பார்வையில் நடைபெற்றது. இருப்பினும் பொது மக்களில் எவருக்கும் ஒரு சேதமும் இல்லை. இது பற்றி குறிப்பிட்ட காவல் துறை ஆய்வாளர், இந்த என்கவுன்ட்டரில் பொது மக்களின் உதவியும் பெரும்பங்கு ஆற்றியதாகக் கூறினார். 

அக்டோபர் 10,  

படித்து முடித்த கார்த்திக் ஒரு திரி பற்ற வைத்த சிவகாசி ராக்கெட் போல் நேராக அவனது அம்மாவிடம் சென்றான்.

"அம்மா தெரியுமா? இந்த என்கவுண்டர பண்ணதுக்காக கமிஷனர் என்ன பாராட்டிருக்காரு." என்றான் சிரித்தபடி.  

"உன்னையா? எதுக்குடா?" 

"பப்ளிக் உதவி இல்லைனா பண்ணிருக்க முடியாதுன்னு சொல்லீருக்காரு. நான் பப்ளிக் தான?
நான் இந்த என்கவுண்டர நேர்ல பாத்தேன் தெரியுமா? நேத்து ஸ்கூல் விட்டு வர்றப்போ. நல்ல வேளை எங்க ஸ்கூல் பாய்ஸ் எல்லாரையும் சில போலிஸ் அங்கிள் வந்து நிறுத்தி வச்சிட்டாங்க. டிராபிக் மொத்தமும் ஸ்டாப் பண்ணிட்டாங்க. போலிஸ் எவ்ளோ தைரியமா சண்டை போட்டாங்க தெரியுமா? நானும் பெரிய ஆளாகி போலீசா தான் ஆவேன்."  

"உனக்கு பயமா இல்லையா?" 

"எதுக்கு பயம்?"  

"அங்க அவங்க சுடுரதெல்லாம் பாத்து பயமா இல்லை?"

"நான் தான் நெறைய தடவை பாத்திருக்கானே சினிமால."  

கீழ்பாக்கம் மருத்துவமனை பிணவறை

பெரும் ஜனத்திரள். நொச்சி குப்பம் மொத்தமும் அங்கே இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி இருந்தது. என்கவுன்ட்டரில் இறந்தவர்கள் வீட்டு பெண்கள் தலைவிரி கோலமாக ஒப்பாரி வைத்தபடி இருந்தனர். அவர்களை அழுதவாறே தேற்றிக் கொண்டிருந்தனர் சில பெண்கள். அதில் ஒரு பெண்ணின் குரல் மட்டும் மிகவும் சத்தமாக இருந்தது.  

"ஐயோ!!! பூபதி உங்க மாமாவ அநியாயமா கொண்ணுட்டாங்கலேடா.......அவரு வண்டி ஓட்ட தானடா கூப்டு போனாங்க. இப்படி எமனா வந்து என் புருஷன கொண்ணுட்டாங்கலேடா." 

பூபதி அருகில் இருந்தவர் அவன் காதோரமாக, "உங்க அத்தைய சும்மா இருக்க சொல்லுப்பா. போலிஸ் நெனச்சா எது வேணாலும் செய்யும்னு தெர்யாதா? அதும் பாட்டுக்கு இப்படி கூவிக்கிநிருக்கு. என்கவுண்டர்ல செத்தவன் அல்லாரும் கிரிமினல் தான் போலிசுக்கு. இது இப்படி அழுதா மட்டும் உன் புருஷன் நல்லவன். தெரியாம கொன்னுட்டோம்னு போலிஸ் ஒத்துக்குமா?" 

புரியாமல் தானும் சேர்ந்து அழுதது அந்தப் பெண்ணின் குழந்தையும். பூபதிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சுத்தமாக கண்ணீர் வரவில்லை. கோவம் தான் வருகிறது. அவன் மாமா இது வரை தண்ணி அடித்து கூட அதிர்ந்து பேச மாட்டார். எப்படியாது அவனை படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார். அடுத்த மாதம் சர்ச்சில் இருந்து காசு வருவதாக சொல்லி இருந்தார். அதில் தன்னை படிக்க வைத்து சொந்தமாக ஆட்டோ ஒன்று வாங்கி ஓட்டி பிழைச்சுக்கலாம் என்று சொல்லி இருந்தார். நேற்று அவர் வீட்டை விட்டு கிளம்பும் போது கூட அதை பற்றி பேசினார். அந்த ஞாயிற்று கிழமை வரப்போகும் ஞான ஸ்நாநத்தில் போட்டுக்கொள்ள நல்ல சட்டை ஒன்று வாங்க வேண்டுமென்று கூறினார். இன்னும் சிறிது நேரத்தில் பொட்டலமாக வெளியே வரப் போகிறார். கோபம்.......அவர் இழப்பை விட அவனது கைய்யலாகாதனம் நினைத்து தான் அதிக கோபம்.

தொடரும்......

Labels: , , , ,

பகடை

முன்னுரை

மனிதனுக்கும் மிருகத்துக்கும் சில வித்யாசங்கள் என்று கூறுவதில் இன்னொரு உயிரை இம்சிக்காததை சொல்வார்கள். அதாவது மிருகங்கள் இன்னோர் உயிரை தன் இரைக்காக அன்றி வேறு காரணங்களுக்காக துன்புறுத்துவதில்லை. மனிதன் மட்டுமே அவ்வாறு செய்கிறான். தன்னால் துன்புறுத்த முடியாத போது தனக்காக ஒரு படையை உருவாக்கி அவர்களுக்கு கூலி கொடுத்து தன்னை எதிர்ப்பவர்கள் மேல் ஏவி விடுகிறான். அப்படி ஏவப்படும் கூலிப் படை சில சமயங்களில் இராணுவம் மற்றும் போலிஸ் போன்ற சீருடைகளும் அணிந்திருப்பது துரதிர்ஷ்டமே. ஏவி விடுபவன் ஒய்யாரமாய் விசை கொடுக்க, இங்கே பொம்மைகள் போல் இரு அணியினரும் ஆடு கின்றனர். வேட்டை ஆடுகின்றனர். இங்கே நடக்கும் வேட்டை இரைக்காக அல்ல. அன்றாட செலவுகளுக்காக, அவர்களின் ஜீவனத் தேவைகளுக்காக, மற்றும் சில சமயங்களில் நிச்சயமில்லாத இந்த வாழ்கையில் சில நாட்களை நிச்சயமாக வாழ்வதற்காக.

இரு பக்கமும் உண்டு நல்லவர், தீயவர், வீரர்கள், கோழைகள், மூடன், அறிவாளி. வேட்டைக்களத்தில் இறங்கிய இரு அணிகளுக்கும் இன்பமும் துன்பமும் பொதுவானதே. இருப்பினும் வேட்டையை நிறுத்தும் அதிகாரம் மட்டும் இல்லை. இதை நான் போர் என்று கூறாததன் காரணம் பண்டைய இலக்கியங்கள் போரில் மாண்டவர்களை வீரர்கள் என்று போற்றுவதால் தான். இங்கே ஈடுபடுபவர்கள் பகடைக் காய்கள். சகுனிகள் மாறினாலும் பகடைக்காய்களுக்கு ஓய்வென்பதில்லை. அவை இரண்டும் இணைந்தே முட்டி மோதும். வீழ்கையில் மட்டும் தனித்து வீழும். உருட்டும் சகுனிகளின் உள்ளம் மட்டுமே அறியும் என்ன எண்ணிக்கை வீழ வேண்டுமென்று.

இங்கே நான் கூறப் போகும் ஒரு கதையும் இரண்டு பகடைக்காய்களை பற்றியே. அவற்றின் பரிமாணங்களை நோக்கின் அவை ஒன்று போல் இருக்கும். இருப்பினும் ஒவ்வொன்றுக்கும் தனிக்கதை உண்டு. ஆனால் சூதாட்ட மேடைக்கு வந்ததும் அவை இரண்டின் கதைகளும் ஒரே மேடையில் தொடர்ந்து செல்லும். இந்தக் கதை என்னுள் தோன்றிய சிறு பொறி. அதை நான் ஊதிப் பெரிது படுத்துவது உங்கள் பின்னூட்டங்களிலும், எனது சோம்பேறித்தனத்தையும் பொறுத்தது. இதை நான் சிறுகதை இல்லை நாவல், குறுநாவல், பெருநாவல் என்று எந்த வரையறைக்குள்ளும் அறுதியிட்டுக் கூற இயலவில்லை. திரைக்கதை பாணியில் எழுதவே எண்ணினேன் முதலில். இருப்பினும் அதன் உட்பொருள் சிலருக்கு எட்டாது என்ற காரணத்தால் கதை வடிவில் சொல்ல எத்தனிக்கிறேன். 

இந்த படைப்பில் எங்கேயாவது பிழையோ இல்லை வரம்பு மீருதலோ இருப்பின் அவற்றை மன்னித்தாலும், சுட்டிக் காட்ட மறக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

Labels: , , , , , ,

Saturday, November 29, 2008

அதிசயத் திருமணம்.........ஆனந்தத் திருமணம்........அபூர்வத் திருமணமே.......


முழு மாட்டை முழுங்கிய மலைப் பாம்பு போல் சோம்பலோடு நகர்ந்த ஒரு ஞாயிறு மதியத்தில் பாடியது எனது செல் போன். எடுத்து பார்த்தால், என்னோடு அலுவலகத்தில் பணி புரிந்த நண்பனின் அழைப்பு.  

என்னடா ராஜ், என்ன விஷயம்? நல்லா இருக்கியா?

"நான் நல்ல இரிக்கேம்பா" கொஞ்சம் எக்கோ எஃபெக்ட்டில் கேட்டது அவன் குரல்.

என்னடா குரல் எக்கோ எஃபெக்ட்டில் கேக்குது? எங்க இருக்க.  

நானா? நான் பாத்ரூம்ல இரிக்கேண்டா. ஹா..ஹா...ஹா....  

அடப்பாவி இந்த நேரத்துலயாடா உனக்கு என் ஞாபகம் வருது?

சீ கழுத உனக்கு எப்பவுமே கிண்டல் தாண்டா. கசின் கல்யாணம் இன்னைக்கு செம பிஸி. 'இதுக்கே' இப்போ தான் நேரம் கெடச்சுது. நாளைக்கு இவினிங் ரிசப்ஷன் இருக்கு நீ கட்டாயமா வரணும்.  

எந்த கசின்? அந்த சேட்டுப் பொண்ண லவ் பண்ணி கல்யாணம்? அவரா?  

அவனே தான்.  

"அவருன்னா கட்டாயம் வருவேன். சேட்டு ஃபிகருங்க வரும்ல" என்று கொஞ்சம் உற்சாகமானேன்.  

ஹா..ஹா..........ஹா........ஹா.....வா வா.  

மறுநாள் ஒரு வார தாடியை சவரம் செய்து கொஞ்சம் பள பள பச்சை சட்டை துவைத்த பேன்ட் என்று கொஞ்சம் பார்க்கும்படி திருமண மண்டபத்துக்கு( அதை அப்படி சொல்ல முடியாது. அது உலோகத்தால் செய்த ஒரு டீசன்டான குடவுன் அவ்வளவு தான். அதற்கு வாடகை 50 ஆயிரம் என்று தெரிந்த போது லேசாக தலை சுற்றியது.) 

படுபாவி ராஜ் வர வில்லை அங்கே. அதாவது பரவாயில்லை. யாரும் வர வில்லை இன்னும். இந்தியாவில் சொன்ன நேரத்துக்கு எங்கும் போகக் கூடாது என்பதை இன்னொரு முறை இது உணர்த்தியது. அவனிடம் போன் போட்டுக் கேட்டால்," உள்ள பொய் உக்காரு. யாராது கேட்டால் என் பேர சொல்லு" என்றான் கூலாக.  

உள்ளே அடி மேல் அடி எடுத்து வைத்து கடைசி வரிசையின் இருக்கை நுனியில் அமர்ந்தேன். ஒரு இரண்டு வினாடியில் என்னை போல் ஒரு ஏமாந்தவர் தன் குடும்பத்தோடு வந்தார். அவர்கள் பேசுவது தெலுகா இல்லை தமிழா என்று என்னால் சரி வர கேட்டுணர முடியவில்லை. (பொதுவாவே கழுதைக்கு ஒட்டுக் கேக்குறது பிடிக்காது. நம்புங்க ப்ளீஸ்....) என் அவர்கள் பேசுவது தமிழா என்ற சந்தேகத்திற்கு காரணம் ராஜ் என்ற ராஜசேகரன். அவனை பற்றிய ஒரு சிறு குறிப்பு கூற வேண்டும் இங்கு.  

ராஜசேகரன் ஹைதராபாதில் வளர்ந்த மூன்றாம் தலைமுறைத் தமிழன். அவனை தமிழ் நாட்டில் வளர்ந்த அவன் வயது இளைஞர்களே தமிழை மறந்து கொண்டிருக்கும் வேளையில், இன்னும் திக்கித் திக்கி மழலை தமிழ் பேசுபவன். தமிழில் அவ்வளவாக கெட்ட வார்த்தைகள் தெரியாமல் என்னிடம் கேட்டுப் படித்து என்னோடு நட்பை ஆரம்பித்தவன். போதும் எங்கள் தெய்வீக நட்பு பற்றிய சிறு குறிப்பு என்று நீங்கள் சொல்வதால்......

ஒரு இரண்டு நிமிடத்தில் என் காதில் காலடி ஓசை கேட்டது. திரும்பி பார்த்தால் ராஜ் ஒரு டெட்ரா பேக் ஜூஸ் குடித்தபடி ஒய்யாரமாக நிற்க்கிறான். 

"பாவி.படுபாவி. வர்ற நேரமாடா இது?"  

"சாரிப்பா.....எவ்ரி வன் வாஸ் டயர்ட் ஆஃப்டர் லாஸ்ட் நயிட்." அவன் கையில் இருந்து கசக்கி எறியப்பட்ட காலி டெட்ரா பேக் போல் ஆனது என் மனது. 

"சொல்வீங்கடா சொல்வீங்க ஓசில சோறு போடுரீங்கள்ள?" - சிரித்தான்.

சரி வா என்று நேராக சமயலறைக்கு அழைத்து சென்றான். அங்கே மிளகாய் தூள் சிவப்பில் ஏதோ வரு பட்டுக் கொண்டிருந்தது. கோழியா? என்று கெட்ட மனது, ச்சே...ச்சே.....கல்யாண ரிசப்ஷன்ல யாருடா கோழி போடுவா என்று சமாதானம் செய்தது. ஆனால் சட்டி பக்கத்தில் போக போக ரெக்கை, சப்பை, நெஞ்சு என்று பல கோழிகள் வரு படுவதை பார்த்து நம்ப முடியாமல் அவனிடம் கேட்டு விட்டேன். "டேய்.........என்னடா இது கோழி மாதிரி இருக்கு?"  

"ஆமாம்பா ரிசப்ஷன் தான? வெஜ் நான்-வெஜ் ரெண்டுமே இருக்கும்." எனக்கு லேசாக பசிப்பது போல் இருந்தது. அதற்குள் அங்கே டி. ஜே. என்ற பெயரில் இரண்டு பேர் காதுகளை பதம் பார்க்க துவங்கி இருந்தார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக ராஜின் உற்றார் உறவினர்கள் வர ஆரம்பித்தார்கள். ஆங்கிலத்தில் அறிமுகப் படலங்களும், கை குலுக்கல்களும் முடிந்த பின், என்னை முன்னே வந்து அமரும் படி கூறி விட்டான். நான் ஒரு ஓரமாக அவர்கள் இல்லாத வரிசையில் போய் அமர்ந்தேன். அவன் அங்கும் இங்கும் சுற்றி வர ஆரம்பித்து விட்டான். சரி இனிமேல் நமக்கு அவனோடு என்ன வேலை. சாப்பிட்டு கெளம்ப வேண்டியது தான் என்று நினைத்தேன். அவர்கள் உறவினர்களில் யாரோ ஒரு நல்லவர் அந்தக் கூட்டத்தில் இருந்து ஒரு சிறுவனை என் பக்கத்தில் துணைக்கு உட்க்கார சொன்னார்கள். சரி நாமளும் ஏதாது பேசலாமே என்று அவனிடம் நான் பேச ஆரம்பிக்க, ஒரு இரண்டு நிமிடம் கேட்டவன், நெற்றி சுருக்கி அவனுக்கு தமிழ் தெரியாதென்று ஆங்கிலத்தில் சொன்னான். சுத்தமாக ஒரு வார்த்தை கூட பேச மாட்டானா என்று கேட்டதற்கு தமிழ் புரிந்து கொள்வேன் என்று கூறினான். ஏதாது சொல்லிக் கொடுக்கலாமா என்று நினைத்தேன். சரி கெட்ட வார்த்தைகள் கற்றுக் கொள்ள இன்னும் வயசிருக்கு பய்யனுக்கு என்று என் தமிழ்ச்சேவையை தள்ளிப் போட்டேன்.  

அவனிடம், ரஜினி காந்த், மகேஷ் பாபு போன்ற உலக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை பற்றி பேசிவிட்டு, அவன் படிப்பு பற்றி பேச ஆசைப்பட்டேன். சரி அவன் பள்ளியில் எவ்வளவு கொள்ளையடிக்கிறார்கள் என்று கேட்டேன். வருடத்துக்கு ஆறு லட்சமாம். கேட்டதும் என்னால் நேராக உட்க்கார முடியவில்லை. எனது திறந்த வாயைப் பார்த்து பய்யன் கொஞ்சம் பயந்து விட்டான். அது ஏதோ இன்டர்நேஷனல் ஸ்கூல் திருடர்களாம். அட பாவிகளா என் மகனெல்லாம் படிக்க வைக்கவே முடியாதே என்னோட சம்பளத்துல? கழுதை பய புள்ளைய வீட்டுல உக்காத்தி வச்சி சொல்லிக் குடுத்திகுரனும்நு பயந்து இருந்தாலும் நம்பிக்கை இழக்காமல், எச்சி முழுங்கி ஆசுவாசப்படுத்தி "தம்பி இதுக்கு முன்னாடி ஏதோ ஒரு ஸ்கூல் சரி இல்லைன்னு சொன்னியே அங்க எவ்ளோ இருக்கும்னு கேட்டேன்."நாலு லட்சம்". அந்த சிறுவன் ஒன்றும் மருத்துவமோ இல்லை விண்வெளி விஞ்ஞானமோ படிக்க வில்லை. ஆறாம் வகுப்பு தான். என்னால் ஆவலை அடக்க முடியவில்லை.  

"அப்பிடி என்னடா இருக்கு அந்த ஸ்கூல்ல?" 

"எல்லாமே இருக்கு." 

போக வர பஸ். சாப்பாடு. அப்பறோம் குதிரை ஏற்றம் முதற்க் கொண்டு எதெதுவோ இருக்கிறதாம். சரி தான். பெரியவனாகி வேலை கெடைக்கலைனா கூட, குதிரையில போய் அலிபாபா கதை கொள்ளைகாரங்க மாதிரி பிழைச்சிக்கலாம்னு நெனச்சிக்கிட்டேன். அதற்குள் கூட்டம் கணிசமாக சாப்பாடு நோக்கி நகர்ந்தது. நான் ராஜிடம் சென்று ஒட்டி கொண்டேன். சில சிறப்பு விருந்தினர்களுக்கு ரகசியமாக மது பாட்டில்கள் வந்தன. மன்னிக்கவும் சென்றன. ராஜ் உண்ணும் படி கூறினான். இல்லை உன்னோடு சேர்ந்து சாப்பிடுகிறேன் என்றதும் அவன் சாப்பிட நேரம் ஆகும் என்றான். "பரவாயில்லை"- இன்னும் அந்த கல்விக் கூட கொள்ளையர்களின் நினைவிலேயே இருந்தேன்.  

ராஜும் நானும் அமைதியாக கல்யாண மண்டபத்தின் ஒரு ஓரத்தில் உட்க்கார்ந்தோம். அங்கே தமிழ் ஹிந்தி என்ற இரண்டு மொழிகள் கைமா ஆகிக் கொண்டிருந்தன. "கௌன் சொன்னான்டா ஐஸா?" "பெரியப்பா கோ நான் தேக்கா நகின்." இப்படி என்ன மொழி என்று தெரியாமல் குழப்பமாக இருந்தது. 

"சாப்பிடலாம் வா" என்றான் ராஜ். சரி என்று இரண்டு ரொமாலி ரொட்டி, கொஞ்சம் மட்டன் பிரியாணி, சிக்கன் மசாலா என்று வழக்கம் போல் சிம்பிளாக சாப்பிட்டு முடித்தேன். அந்த பிரியாணி இந்த ஊரில் உள்ள தலை சிறந்த பிரியாணி என்று கொண்டாடப்படும் பாரடைஸ் பிரியாணியை விட மிகவும் சுவையாக இருந்தது. அங்கிருந்த டபிள் கா மீட்டாவும், அவ்வளவு சுவையாக இருந்தது என்னால் இரண்டாவது முறை வாங்கி உண்ணாமல் இருக்க முடியவில்லை. இவை எல்லாம் சேர்ந்து அது ஒரு தமிழ் குடும்பத்து கல்யாணம் போல் தெரியவில்லை எனக்கு. தமிழ் பெண்கள் ஜிகு ஜிகு சேலையிலும், வடக்கத்தி பாணி சேலைக் கட்டிலும் அன்னியப் பட்டு தெரிந்தார்கள். பெண் வீட்டு மார்வாடிகள் சிக்கனை பார்த்து நெளிந்தார்கள். 

சேட்டு பெண்களை சயிட் அடிக்கும் ஆசையில் சென்ற எனக்கு அங்கே இருந்த சேட்டு பெண்கள் யாரும் ப்ரீத்தி ஜிந்தா போலவோ இல்லை நம்ம நமீதா போலவோ இல்லை. அதில் கொஞ்சம் வருத்தம் தான். என்ன செய்ய? ஆனால் இங்கே வர முக்கிய காரணம் ராஜின் கசின். ஏன்?  

இந்த திருமணம் காதல் திருமணம் என்று உங்களுக்கு தெரியும். ஆனால் அந்த சுவாரசியமான காதல் கதை தெரியாது. இந்த காதல் கதை ஜோடிகள் இருவரும் 15, 16 வயதில் இருக்கும் போது தொடங்கியது. பத்தாம் வகுப்பில் ஆரம்பித்தது. சில வருடம் காதலிலேயே கழிந்திருக்கிறது. பெண் வீட்டிலோ அவருக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள். நேராக நம்ம கதாநாயகனிடம் வந்திருக்கிறார் அவர். "ஓடிப் போலாமா?" என்று அப்போது வந்த மணி ரத்னம் பட வசனம் பேசி இருக்கிறார். கதாநாயகன் காதலுக்கு மரியாதை செய்யும் நேரத்தில் தன் பெற்றோருக்கு மரியாதை குறைந்து விடக் கூடாது என்ற நல்லுள்ளம் படைத்தவர். "இங்க பாருமா நான் படிச்சிட்டு தான் இருக்கேன் இன்னும். என்னால உன்னை வச்செல்லாம் காப்பாத்த முடியாது. போக எங்க அய்யா ஆத்தாவல்லாம் தலை குனிய வைக்க முடியாது. அதுனால உங்க அப்பா பாத பையன கட்டிக்க."- இப்படி முடித்து விட்டார். பொண்ணு என்ன கெஞ்சியும் அசரல.  

அந்த துரதிர்ஷ்டக் கல்யாண நாளும் வந்தது. கல்யாணமும் முடிஞ்சது. பொண்ணு கல்யாணம் பண்ணிக் குடுத்தது சென்னை ஸொவ்கார்பேட்ல. வைர வியாபாரிங்களாம். அந்த கல்யாண நாள நான் துரதிர்ஷ்டமானதுன்னு சொல்றதுக்கு ஒரு காரணம் இருக்கு. அந்த பொண்ண கல்யாணம் பண்ணவர் பாவம் இறந்து போயிட்டாரு. ஒன்னரை வயசு கைகொழந்தயக் கைல வச்சிக்கிட்டு இந்த அம்மா கைம்பெண் ஆயிட்டாங்க. அப்புறம் விதி இவங்க ரெண்டு பேரையும் சந்திக்க வச்சிருக்கு. இவரு கல்யாணம் பண்ணிக்கல இன்னும். ரெண்டு பெரும் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லி டும் டும் தான். 

என்ன பொறுத்த அளவு உலகத்துலேயே சிறந்த காதல் ஜோடின்னு நான் நெனச்சது புஷ்பவனம் குப்புசாமி அனிதா குப்புசாமி தான். ஆனா அத தமிழ் நாட்டு பத்திரிக்கை எல்லாம் கிழிச்சு நார் நாரா தொங்க விட்டுருச்சு. நான் ரோமியோ ஜுலியட், அம்பிகாபதி அமராவதிஎல்லாம் பாத்ததில்லங்க. அவங்க காதல்லாம் தான் அமரக் காதலானும் எனக்கு தெரியாது. ஆனா எனக்கு தெரிஞ்ச சிறந்த காதல் ஜோடி என் கண்ணால பாக்க கூடிய ஒரு காதல் ஜோடி இவங்க தான். இவங்கள பாக்காம விட்டிரக் கூடாது அப்படின்னு என் மனசுக்கு தோணிச்சு. இந்த கதைய பத்தி கேட்டப்போவே ராஜ் கிட்ட சொல்லி இருந்தேன் என்ன கட்டாயமா கூப்டணும்னு. அவன் மறக்கலை. இப்போ கல்யாணத்துக்கு அந்த அம்மாவோட அஞ்சுவயசுக் கொழந்தை வரலையாம். அந்த பாப்பா வளர வளர அதுக்கு அவங்க மேல மதிப்பும் அன்பும் வளரும்னு நான் நம்புறேன். நீங்களும் நம்புங்க. நம்பிக்கை இல்லைனா என்ன வாழ்க்கை?

Labels: , , , , ,

Tuesday, November 25, 2008

பேனா சிரிக்குமோ?



மூன்றாம் வகுப்பில்
முதன் முதலாக
பேனா பிடித்தேன்.
பிஞ்சு விரலால் 
எழுதிய முதல்
பேனா இன்றும் 
பொக்கிஷமாய்.

இன்றும் ஒவ்வொரு முறை 
திறக்கும் போதும், 
மை இல்லாமல் தவித்த 
நான்காம் வகுப்பு
அரையாண்டுத் தேர்வில்
ஏற்பட்ட பயம் 
லேசாய் இதழோரம் 
சிரிப்பு மூட்டிச் செல்லும். 

புதுசாய் எத்தனை 
பேனா வந்தாலும் 
ஏப்ரல் ஒண்ணாந் 
தேதி மை தெளிக்க
உபயோகிப்பதற்காகவே 
முதல் பேனா 
பாதுகாக்கப்பட்டது. 

பத்தாம் வகுப்பு பரீட்சையில்
மை தீர்ந்து போனால் 
ஊற்றிக் கொள்ள 
மை குடித்து 
குட்டி மை புட்டியாக
கூட வந்தது. 

கட்டுக் கட்டாய் 
காகிதம் தின்னக்
கொடுத்து 
சொட்டுச் சொட்டாய் 
மை வண்ணங்கள் 
ஊற்றி எழுதிய
என் பேனா ஒரு நாளும் 
என் எண்ணங்களை 
ஊற்றி எழுதாததை
எண்ணி ஏளனமாய் 
சிரிக்குமோ?

Labels: , , ,

சும்மா ஒரு பரிசோதனை முயற்சி


சும்மா திரைப்பாடல் போல் கிராமிய மணத்தோடு ஒரு பரிசோதனை முயற்சி. 


சிவகாசிப் பட்டாசுடி நான்
சின்னப் புள்ள உன் மல்லிகைப்பூ 
சிரிப்புல தான் நான் சிதறிப்போனேன்.

சண்டியரா சுத்துன நான்
சமஞ்ச புள்ள உன்னப் பாத்து 
மயிலப் பாத்த சப்பாணியா
சுத்தி சுத்தி வாறேன். 

உன் ஒத்தை சடை குஞ்சம்
அதா நான் மாறட்டுமா கொஞ்சம்.
உன் வீட்டு ஆட்டுக்குட்டி போல
மடியில தான் நான் வரவா புள்ள?

ஆத்தோரமா நான் குளிக்க
மறுபக்கம் நீ கால் நனைக்க 
ஆத்துக்குள்ள வேக்குதடி எனக்கு.

ஓரக்கண்ணில் பாக்குற 
ஒதுங்கி தான் நடக்குற
முன்னாடி போக விட்டு
பின்னாடி சிரிக்கிற

ஒரு முடிவ சொல்லிரு 
என் உயிரையும் தான்
திருப்பி தந்திரு

Labels: , , , , ,

Sunday, November 23, 2008

எரியும் நினைவுகள்





புற்று நோயில்
இறந்த நண்பனை 
எரித்து விட்டு 
திரும்புகையில் 
அவனுக்கு கொடுத்த கடன்,
சிறுவயதில் போட்ட சண்டை,
சொல்லாமல் மறைத்த 
அவன் தங்கை மீதான ஒருதலைக் காதல்,
என்று எதற்காகவும் வருந்தவில்லை.
அவன் வாழ்க்கையின்
முதல் சிகரெட் வாங்கி தந்தது
மட்டும் ஒரு ஓரத்தில்
கனன்று கொண்டே
இருக்கிறது.

Labels: , , ,

அவள்


அவள் என் பெயரை
உச்சரித்ததும்
என் பெயர்
பிடித்துப் போனது.
ஒரு குடையின் கீழ்
என்னையும் அவளையும்
இணைத்ததில் தொடங்கியது
மழை மீதான எனது பாசம்.
ஒரு நாள்
அவள் எடுத்து நீட்டியதில்
இருந்து தினமும்
விரிகிறது என் நாளிதழ்
எந்தன் தோளோடு அவள்
உரசுவதாலேயே பிடிக்கிறது
பேருந்து நெருக்கடி
என் தாயோடு பேசுகையில்
அளைந்து விட்டுப் போனதாலே
இனித்தது என வீட்டு
உப்பு மொத்தமும்.
ஒவ்வொரு நாளும்
சிரித்து கடந்து
செல்வதாலேயே
விருப்பமானது வாழ்க்கை.

Labels: , , , ,

Tuesday, November 11, 2008

தொடரட்டும்




மின்னல்கள் தாக்கியும்
வெட்டுப்படாதது என் நெஞ்சம்
துப்பட்டாவில் தூக்கிச் 
சென்றாய் நீ. 

புயல்களை புறம் 
தள்ளி வந்தேன் 
உன் பூவிழி பார்வை 
பட்டே வீழ்ந்தேன்.  

ஆயிரம் கேள்விகள்
மனதில் . 
விடை சொல்லாமல் நீ 
செல்கின்றாய். 
சொல்லாமலே விட்டு 
விடு. 
பதில் தெரிந்தால் 
முற்றுப் பெற்று 
விடலாம் நமது
உறவு.

Labels: , , ,

Wednesday, November 5, 2008

கவிதை


கவிதை எழுத 
அமர்ந்தேன் ஓர் நாள்.
காதல் பற்றி எழுத
நினைத்ததும் தான்
நினைவு வந்தது 
இது வரை 
காதல் புரிந்ததில்லை என.
சமூக அவலம் பற்றி
எழுத நினைக்கையில் 
"அம்மா தாயே....."
என்று கேட்ட குரல் 
"எச்சி கையில காகா
ஓட்டாதவன்டா நீ."
ஓலமிட்டது மன சாட்சி.
நட்பென்று நினைத்ததுமே
சிரித்து பேசிய படி 
முதுகில் குத்திய நினைவுகள்
வந்து முற்றுப்புள்ளி வைத்தது.
எங்கெங்கோ முட்டி திரிந்த
பின் தெளிவு பெற்றது 
என் மனம்.
கவிதை என்பது முத்து 
குளிப்பது போல் உணர்ச்சிக் 
கடலில் முங்கி 
எடுக்க வேண்டும்
குட்டை முன் அமர்ந்து 
தூண்டில் வீசி 
மீன் பிடிப்பதல்ல என்று.
இப்போது வெள்ளை 
காகிதம் என் மனதை
பிரதிபலிப்பதாய்
எனக்கு தோன்றியது.

Labels: , , ,

அப்பிடி என்னத்த தான் தேடுறாங்க?


நம்ம ஆளுங்க கூகிள் இணையத் தளத்துல என்னத்த தான் தேடுறாங்கன்னு பாக்கனும்னு எனக்கு ஒரு ஆசை. கடைசி 12 மாசத்துல நம்ம ஆளுங்க என்னென்ன தேடுறாங்கன்னு பாத்தேன். 1. இந்தியா மொத்தமும் அதிகமா தேடுறது இந்தியாவ தான்!!!!!!! இந்தியா அப்படின்ற search term தான் டாப்பு. 2. அடுத்ததா தேடுறது தரவிறக்கம்(டவுன்லோட்) தான். 3.. பாட்டு. 4. வீடியோ (எல்லாம் ஆம்பளைங்களா தான் இருக்கும். வீட்டுல பொம்பளைங்க மெகா சிரியல் பாத்துட்டே இருந்தா டிவி எங்க பாக்க?) 5. கூகிள் (நம்புங்கய்யா.......நம்புங்க. கூகுளுக்கு உள்ள வந்து நம்ம ஆளு கூக்ள தேடுறாங்க.) 6. யாஹூ 7. வீடியோ (4 சிங்குலர், இது ப்லுரல்.) 8. ஆர்க்குட். (இந்தியாவுக்கு தான் ஆர்க்குட் அதிகமா யூஸ் பண்றதுல செகண்ட் பிரைசு தெரியும்ல?) 9. கேம்ஸ் (ரொம்ப முக்கியம்) 10. ஜிமெயில் (அப்போ யாகூல இருந்து மாறிட்டீங்களா?)

அதெல்லாம் இந்தியா மொத்தத்துக்கும். தமிழ்நாட்டுலன்னு பாத்தீங்கன்னா.........

1. இந்தியா (நல்லா தேடி இப்போவே பாத்துக்கங்கப்பா.பல பேரு தனி நாடு கேட்டுட்டிருக்காங்க.) 2. தமிழ் (தேடி கண்டுபிடிக்க வேண்டிய பொருள் தான்) 3. பாட்டு (பெப்சி உமாட்ட கேட்டது பத்தாதுன்னு இங்க வந்து வேற) 4. கூகிள் (சொல்றதுக்கு ஒண்ணுமில்ல) 5. யாஹூ 6. ஆர்குட் 7. வேலை (உங்களால தான்யா மழையே பெய்யுது.) 8. ஜாவா (இன்னுமாடா ஊர் உலகம் ITய நம்பிட்டிருக்கு?
9. ஜிமெயில் 10. கேம்ஸ்

Labels: , ,

பூ இசை


பூ படத்துல மொத்தம் ஆறு பாட்டுங்க. எனக்கு கேட்டோன பிடிச்சதுனா அது சூ சூ மாரி பாட்டு . அந்த பாட்ட எப்போ கேட்டாலும் 'ஒன்ஸ் மோர்' கேக்காம இருக்கவே முடில. அந்த குழந்தைங்க (இல்ல அப்படி பாடுனவங்க) அவ்வளவு அருமையா பாடிருக்காங்க. அந்த பாட்டு வரியும் கொழந்தை தனத்துல அர்த்தம் இல்லாம பாடிட்டு போன சின்ன வயசு ஞாபகம் வருது. அப்பறோம் 'சிவகாசி ரதியே' பாடுனது நம்ம பெரிய கருப்பு தேவராம். (விருமாண்டி கோவில் பூசாரி) எனக்கு தெரிஞ்சு சின்ன வயசுல விரும்புன ஆள நரைச்சு கெழண்டதுக்கு அப்பறோம் திருப்பி கல்யாணம் பண்ற மாதிரி பாட்டு இது வரை கேட்டதில்ல. அந்த வகைல இத ஒரு வித்தியாசமான பாட்டுன்னே சொல்லலாம். "ஆவரம் பூ" பாட்டு ஒரு பொண்ணு அவ முறைப் பய்யனுக்கு காதிருக்குரத அவன் மேல வச்சிருக்குற காதல சொல்ற பாட்டு. சின்மயி கொரல்ல ஒரு ஏக்கம் ப்ளஸ் பாசம் நல்லாவே தெரியுது. "தீனா" பாட்டு வேகமா ஆரம்பிச்சு அப்பிடியே கொஞ்சம் கொஞ்சமா மெதுவா மாறுறது ரசிக்க முடியுது. "பாச மொழி" பாட்டு சின்னதா இருந்தாலும் ரசிக்க முடியுது. ஹரிணி, திப்பு, கார்த்திக் சேர்ந்து பாடுன "மாமன் எங்கிருக்கான்" பாட்டு கிராமிய இசை மாதிரி தெரிஞ்சாலும் அதுல ஒரு நேட்டிவிட்டி இல்லை. இருந்தாலும் கேக்குறதுக்கு நல்லா இருக்குது. மொத்தத்துல புது ஆளு எஸ்.எஸ்.குமரன் நல்லாவே மியூசிக் போட்டிருக்காரு.

Labels: , , , ,