Kazhudhai

கற்பூர வாசனை தெரிந்த கழுதை

Monday, March 22, 2010

தனிமை, பயணம்


வயிற்றுக்குள் பறக்கும்
பட்டாம்பூச்சி,
பக்கத்து இருக்கையில்
சிரிக்கும் குழந்தை,
உடுக்கை இடை பணிப்பெண்ணின்
கன்னக் குழி,
ஜன்னலில் தெரியும்
வெண்பஞ்சு மேகம்,
மணல் கோட்டையாய், சொப்பு சாமானாய்,
வண்ண ஓவியமாய், மருவி
ஒரு புள்ளியென
காலின் கீழ் நழுவும் நகரம்.
எதிலும் லயிக்கவில்லை
சகோதரியின் விபத்தால் சடுதியில்
ஏற்பட்ட முதல் விமானப் பயணம்.

Wednesday, March 10, 2010

கவிதை விளையாட்டு


பேருந்து நிறுத்தத்தில்
ஒரு பெண்ணை பார்க்கையில்
அருகில் வந்து நிற்கும்.
கைபிடிக்கவா, இல்லை பேருந்தைப் பிடிக்கவா
என்ற குழப்பத்தில்
பேருந்தை பிடித்து ஏறி
உள்ளே சிரிக்கும் குழந்தையை பார்க்கையில்
கூட்டத்தில் முண்டி அடித்து முன்னால் வரும்.
சில்லறை தேடி எடுத்து நிமிர்கையில்
எங்கோ ஓடி ஒளிந்திருக்கும்.
அலுவலகத்தில் கணினியில்
மூழ்கித் தவிக்கையில், ஒளிக் கீற்றாய்
தொட்டுச் செல்லும்.
இணையக் கடலில் இருந்து
வெளி வந்து இளைப்பாருகையில் மீண்டும்
அருகே வந்து உட்காரும்.
அந்த பொழுதுக்காகவே காத்திருந்த
பழைய நண்பன் செல்லிடப் பேசியில் எட்டிப்
பார்ப்பான்.
வீடு திரும்பி கண் அயர்கையில் தலை கோதி
முத்தமிட்டு கனவில் கரைந்து போகும்.
மறுநாள் ஒரு அழகிய பெண்ணை நோக்குவதில்
மீண்டும் தொடங்கும் கவிதைக்கும் எனக்குமான
கண்ணாமூச்சி.

Labels: ,