Kazhudhai

கற்பூர வாசனை தெரிந்த கழுதை

Monday, October 31, 2011

திருவாளர் பகவான்


அந்த ரூம்ல வீணை சத்தம் "டிவிங்" டிவிங்" நு வந்துட்டிருந்தது.
திருவாளர் பகவான் மெதுவா கண் தொறந்தார். கண்ண ஒரு இரண்டு செகண்டு சிமிட்டுனதும் நார்மலா இருந்தது. காண்டேக்ட் லென்ஸ் போட்டு பழக்கம் இல்லை. இப்போ தான் முதல் முறையா ட்ரை பண்றார்.
பவர் எல்லாம் கிடையாது. சும்மா ஒரு ஸ்டைல். ஒவ்வொரு நாளும் ஓவொரு கலர் கண்ணாடி. இன்னைக்கு நீலக் கலர்.

எதிர்ல இருந்த மானிட்டர பார்த்தார். ஜப்பானில் மீண்டும் நில நடுக்கம். உதட்ட பிதுக்கியபடி இன்னொரு மானிட்டர்ல வரிசை வரிசையாக ஓடுன "கோட்"ச உற்று பாத்தாரு. எதுவும் பிடிபடலை.

ஒரு சொடக்கு போட்டு, "என்ன ஆச்சு? அஞ்சு மாசத்துல இது மூணாவது தடவ. கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க மாட்டீங்களா?"

"சாரி சார். ஆட்டோமேட் பண்றப்போ ஏதோ பக் வந்திருக்கு. "

"போன முறையும் இதே தான் சொன்னீங்க. அதை இன்னும் டீபக் பண்ணலையா? teSterS என்ன பண்றாங்க?"

"போன தடவை பழைய வெர்ஷன்ல எக்சிக்யுட் பண்ணதால அப்பிடி ஆச்சு. இப்போ டீபக் பண்ணிட்டோம்னா பிரெச்சனை இருக்காது."

"ஏதாது காரணம் சொல்றதே உங்களுக்கு பழக்கம் ஆயிருச்சு. இப்பிடி இருந்தா ஏன் நம்மள திட்ட மாட்டாங்க? ஊர் உலகத்துல சும்மாவே நம்மள வருத்தேடுக்குறாங்க. இதுல நீங்க வேற இப்படி பண்ணா நம்ம மேல உள்ள நம்பிக்கை சுத்தமா போயிரும்."

பகவான் கொஞ்சம் காட்டமாகவே சொன்னார். பின்ன என்ன? அவருக்கு கண்ல பவர் இல்லைனாலும் எவ்ளோ பவர்புல் ஆளு? கடவுள்னா சும்மாவா? அவரு நெனைச்சா ஜஸ்ட் லைக் தட் ஒரு க்ளிக்ல உலகத்தையே ஷட் டவ்ன் பண்ணிருவாரு. ஆனா பூமியில இப்போ அவரோட பாப்புலாரிட்டி கொரைஞ்சிட்டே வருது. ஒரு காலத்துல கடவுள தேடுறேன்னு குரூப் க்ரூபா ஆளுங்க அலைஞ்சாங்க. இப்போலாம் அவன் அவன் கூகுளே கதின்னு இருக்கானுங்க. அதுல கூட கடவுள அவ்வளவா தேடுறதில்ல எவனும். முந்திலாம் ஏதோ அழிவு பஞ்சம்னா அவன் அவன் கடவுளே காப்பாத்துன்னு கேப்பான். இப்போலாம் அந்த Trend கொரைஞ்சிக்கிட்டு வருது.

நாலு வருஷம் முந்தி கடவுளுக்கு பயங்கர கோவம். நாம இல்லன்னு நெனைக்கிரவனுங்க முன்னாடி போய் நின்னு ஒரு பரபரப்ப உண்டாக்கலாம்னு நெனச்சாரு. அதுக்கு மதுரை பக்கத்துல ஒரு சின்ன ஊரையும் செலக்ட் பண்ணாரு. அந்த ஊர் தேர் திருவிழால போய் நிக்கலாம்னு நெனைச்சாரு. ஆனா அவரு போறதுக்கு ரெண்டு நாள் முன்னாடியே அங்க தேர் இழுக்குரதுல ஜாதிக் கலவரம் வந்து துப்பாக்கி சூடு அது இதுன்னு ஆகிப் போச்சு. இது தெரியாம அவரு அங்க போய் நின்னா ஒரு பக்கியக் காணும். ஊரு முழுக்க வீட்ட பூட்டி உள்ள உக்காந்திருக்கானுங்க.

அவரோட Safety அனலிசிஸ் டீம் இனிமே இப்படி ஜனத்திரளான இடத்துக்கெல்லாம் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அதுனால காஞ்சிபுரத்துல ஒரு சின்ன கோவில செலக்ட் பண்ணி அங்க திடீர்னு ஒரு முக்கியத்துவம் இல்லாத நாள்ல போய் நிக்கலாம்னு போனா........

கருமம்.......கருமம்........கோவில் கர்பகிரகம்னு கூட பாக்காம அங்க அந்த கோவில் அர்ச்சகர்..........சீ..சீசீ........பகவான் அங்க போனதையே அதுங்க ரெண்டும் கண்டுக்கல. அந்த பொண்ணு கழுத்துல தாலி தழைய தழைய தொங்குது. இதுங்கல்லாம் கோவிலுக்கு வரலன்னு யாரு அழுதா? பாவம் கடவுளால தாங்கிக்கவே முடில. கண்ண மூடிட்டு கெளம்பி போயிட்டாரு. மேலோகத்துல "பிரயானம்லாம் எப்பிடி?"ன்னு கேட்டவங்கள்ட "ம்...." அப்படின்னு ஒரு எழுத்துல தான் உருமுனாரு. என்ன ஏதுன்னு எதுவும் சொல்லல. இந்த வெக்ககேட வெளியில எப்பிடி சொல்வாரு பாவம்? அவரு சொல்லாம மறைச்சத நக்கீரன், ஜூ.வி.நு பத்திரிக்கைங்க பக்கம் பக்கமா கொஞ்ச நாள்ல "பப்ளிக்குட்டி" பண்ணிருச்சு. எதுதாப்புல கடவுள க்ராஸ் பண்றவன்லாம் அவர பாத்துபுட்டு ஒரு நமட்டு சிரிப்போட போறானுங்க. அவரு அவரோட ஆபீஸ் பயன நெனச்சு மனச தேத்திக்கிட்டாரு. அவரு நெலமை எவ்வளவோ பரவா இல்லன்னு. அவரு வந்த ஒரு மாசம் கழிச்சு ஒரு தேவ தூது எடுத்துக்கிட்டு ஸ்வீடன்ல ஒரு தேவாலயத்துக்கு போனாரு அந்த ஆபீஸ் பாய். கடவுள் பாத்தது பரவால்ல அர்ச்சகரும் ஆண்டியும். ஆனா அந்த தேவாலயத்துல அம்மணமா நினனது ரெண்டுமே ஆம்பளைங்க. "கடவுளே.......கடவுளே........."நு கன்னத்துல போட்டுட்டு வந்துட்டாரு அவரு.

இப்போலாம் கடவுள் நரகத்துக்கு மட்டும் தான் போறாரு inspect பண்ண. அங்க தான் இவர பாத்ததும், "கடவுளே காப்பாத்து"ன்னு கத்துறவன் அதிகம் இருக்கான். ஊர் சொத்த வளைச்சு போட்ட பொறம்போக்கு, மடம் வச்சி மாமியோட படம் பாத்த சுவாமி (இது கமிஷனர் ஆறுச்சாமி அல்ல), கடவுளுக்கு வழி காட்டுறேன்னு சொல்லி மக்களை ஒரு வழி பண்ணவங்க, எங்க சாமியா கொக்கான்னு குண்டு வச்சி பிஞ்சுக் கொழந்தைங்கள கொன்னவனுங்க, கலப்படம் பண்ணி சம்பாதிச்சி குடமுழுக்கு நடத்துறவங்க, இப்படி எல்லா கழிசடையும் அங்க தான் இருக்கும். எல்லாம் பாவம் செஞ்சிட்டு சாமி சாமின்னு வேஷம் போட்டவனுங்க. அங்க கும்பிபாகம், தமிஸ்ரம்னு டிசைன் டிசைனா தண்டனை. அங்க போய் அவனுங்க கஷ்டப்படுரத பாக்குறதுக்காக போறதா; சொர்க்கத்துல இருக்குறவங்க எல்லாருமே நல்லவங்க தான? அவங்கள போய் எதுக்கு பாக்கணும்னு வெளில சொல்லிக்குவாறு.

ஆனா உண்மை என்னென்னா.......இப்போலாம் கடவுள் இல்லைன்னு சொல்றவன் தான் சொர்க்கத்துல அதிகம் இருக்கானுங்க. அவனுங்க கொஞ்சம் புத்திசாலியா வேற இருக்கானுங்க. போனா கேள்வி கேட்டு கொடைஞ்சு எடுக்கிறானுங்க. "ஏன் எங்க நாட்டுல மட்டும் இப்படி லஞ்சம் தலை விரிச்சாடுது? ஈழத்துக்கு ஏன் சுதந்திரம் கெடைக்கல? சின்னக் குழந்தைங்கல்லாம் ஏன் மதக் கலவரத்துல சாகனும்? இதத் தடுக்ககூடாதா? நாட்ட கெடுத்தவன் குடும்பம் தலை முறைக்கும் நல்லா இருக்கே? நான் ஏன் ஏழையா பொறந்தேன்? கடைசி iphone மாடல் எப்போ வரும்? நீங்க நல்லவரா? கெட்டவரா?" ஷப்பா............ கடவுள் இப்போலாம் அங்க போறதே இல்ல. வேர்ல்ட் ஆர்கிடேக்ச்சர், ஹ்யூமன் சின்ஸ் லாக், வெதர் ஷேட்யுளர், இப்படி எல்லாத்தையும் டிஜிட்டலைஸ் பண்ணதுல எக்கச்சக்க சாப்ட்வேர் பிரெச்சனை வேற அடிக்கடி வருது. கேட்டா ஏதேதோ சொல்லி கொழப்புரானுங்க. அவரு வெறும் ரப்பர் ஸ்டாம்ப் மாதிரி தான் இப்போ. அவருக்கு மேலோகத்துல என்ன பட்டப் பேரு தெரியுமா? "மன்மோகன் சிங்."


Labels: , , , ,

Tuesday, March 15, 2011

புதுசு கண்ணா புதுசு



வெட்டியாத்தான இருக்கோம் ஏதாது எழுதலாமேன்னு தோணுச்சு. சரி நாமளும் ஒரு புது ஆத்திச்சூடிய எழுதுவோம்னு நெனச்சேன். அர்த்தம் புரியாதவங்க, என் கிட்ட தனிப்பட்ட முறைல எழுதி கேட்டுக்கோங்க. ஆனா ஒரு கண்டிஷன். நாளைக்கு தஞ்சாவூர் கல்வெட்டுல இல்லைனாலும் எங்கயாது ஒரு நல்ல எடமா இத செதுக்கி வச்சா பின்னாடி வர்ற சந்ததிகள் படிச்சு தெரிஞ்சிக்க வசதியா இருக்கும். (ஆள் இல்லைனாலும் டீ கடைன்னு வந்திட்டா ஆத்தி தான ஆகணும்?)



அரசியல் படி
ஆண்பெண் சமம்
இயற்கை போற்று
ஈரம் வளர்த்திடு
உலகம் சுற்று
ஊர்பணி ஆற்று
எடுத்ததை முடி
எத்தரை விலக்கு
ஏற்றம் நாடு
ஐயம் தீரு
ஒழுக்கம் உயர்வு
ஓட்டம் நிறுத்தேல்

ஔக்கு மட்டும் ஏதும் சிக்கலை

பி.கு.: அப்பறோம் என்னடா ஆத்திச்சூடிக்கு இப்படி ஒரு கவிரிசி படமானு பாக்குறீங்களா? நான் "புதுசு கண்ணா புதுசு"ன்னு கூகுள்ல தேடுனப்போ இது தான் பளிச்சின்னு இருந்துச்சு. சரி இப்படி கூட ஒரு படம் வந்திருக்குன்னு ஒரு நாலு பேருக்கு தெரியட்டுமேன்னு ஒரு நல்லெண்ணத்துல தான் இந்தப் படத்த ஒட்டிருக்கது. மத்தபடி நான் அந்த மாதிரி படம்லாம் பாக்குறதே இல்ல.

Labels: , , , ,

Monday, September 6, 2010

சாமி ஊர்வலம்




நான்கு வருடத்துக்கு முன்
நடந்தது ஊர்த் திருவிழாவில்
சாதிக் கலவரம்.
இன்று வரை நடக்கவில்லை
மீண்டும் சாமி ஊர்வலம்.
யாருக்குத் தெரியும்? சாமி
வெட்டுக் குத்துக்கு பயந்து
ஓடி விட்டதோ? இல்லை
திருவிழாவில் தொலைந்து விட்டதோ?

Monday, March 22, 2010

தனிமை, பயணம்


வயிற்றுக்குள் பறக்கும்
பட்டாம்பூச்சி,
பக்கத்து இருக்கையில்
சிரிக்கும் குழந்தை,
உடுக்கை இடை பணிப்பெண்ணின்
கன்னக் குழி,
ஜன்னலில் தெரியும்
வெண்பஞ்சு மேகம்,
மணல் கோட்டையாய், சொப்பு சாமானாய்,
வண்ண ஓவியமாய், மருவி
ஒரு புள்ளியென
காலின் கீழ் நழுவும் நகரம்.
எதிலும் லயிக்கவில்லை
சகோதரியின் விபத்தால் சடுதியில்
ஏற்பட்ட முதல் விமானப் பயணம்.

Wednesday, March 10, 2010

கவிதை விளையாட்டு


பேருந்து நிறுத்தத்தில்
ஒரு பெண்ணை பார்க்கையில்
அருகில் வந்து நிற்கும்.
கைபிடிக்கவா, இல்லை பேருந்தைப் பிடிக்கவா
என்ற குழப்பத்தில்
பேருந்தை பிடித்து ஏறி
உள்ளே சிரிக்கும் குழந்தையை பார்க்கையில்
கூட்டத்தில் முண்டி அடித்து முன்னால் வரும்.
சில்லறை தேடி எடுத்து நிமிர்கையில்
எங்கோ ஓடி ஒளிந்திருக்கும்.
அலுவலகத்தில் கணினியில்
மூழ்கித் தவிக்கையில், ஒளிக் கீற்றாய்
தொட்டுச் செல்லும்.
இணையக் கடலில் இருந்து
வெளி வந்து இளைப்பாருகையில் மீண்டும்
அருகே வந்து உட்காரும்.
அந்த பொழுதுக்காகவே காத்திருந்த
பழைய நண்பன் செல்லிடப் பேசியில் எட்டிப்
பார்ப்பான்.
வீடு திரும்பி கண் அயர்கையில் தலை கோதி
முத்தமிட்டு கனவில் கரைந்து போகும்.
மறுநாள் ஒரு அழகிய பெண்ணை நோக்குவதில்
மீண்டும் தொடங்கும் கவிதைக்கும் எனக்குமான
கண்ணாமூச்சி.

Labels: ,

Saturday, February 20, 2010


வளைந்தும் நெளிந்தும்
வண்ணங்கள் குடித்து,
துளிர் விட்டு, சிறு மலர்கள் பூத்து,
ஆங்காங்கே சுடர் ஏற்றப்பட்டு அழகாய்
படர்ந்திருந்தது அதிகாலைக் கோலம்.
அதை மிதித்து கலைத்த
குழந்தையின் சிரிப்பு
அதனினும் அழகாய்.

Labels: , , , ,

Sunday, January 17, 2010




செருப்பு, சட்டை,
காலணி என்று யாவும்
ஜோடியாய் என்னை பார்த்து
ஏளனம் செய்ய,
ஒற்றையாய் சுற்றும்
காத்தாடி மட்டும் என்னோடு
பேசும் - தனிமையில் கழிந்தது
இன்னொரு ஞாயிறு மதியம்.

Labels: ,